Thursday, August 16, 2012

பசுமை நிறைந்த பால்யம்!!!

விடியலில்  இருள் கரையதொடங்குவது போல, பால்யம் சுமந்த நினைவுகள் முழுவதும்  என்னுள்  கரைந்து  வியாபிக்கிறது. எனக்கு நினைவு தெரிந்து  பூனை படம் போட்ட  நீலகலர் பனியனை போட்டுக்கொண்டு அலைந்து  திரிந்த நாட்கள் ஒரு வசந்த காலம். பச்சைக் கம்பளம் விரித்த பசிய வயல்களுக்கு நடுவே தாத்தாவின் கைபிடித்து வரப்பில் நடந்ததும், வயலில் நடவு நடும் வேலையாட்களின் குலவை சத்தமும், நாற்று பறித்து லாவகமாக முடிச்சிடும் போது பசுந்தளிர் சிறிதாக கசங்குவதால் ஏற்படும் ஒருவித வாசமும்  இன்னும் என் மனதை விட்டு அகலாதவை.

எல்லோரும் பள்ளி செல்லும் நாளில், மட்டம் போடுவதைப் போல மகிழ்ச்சி தருவது வேறொன்றுமில்லை  பால்யத்தில். பள்ளி செல்லா நாளொன்றின் முற்பொழுதுகளில் அலை அலையாய் இறங்கி கொண்டிருக்கும் வெயிலின் ஊடாக அலைந்து திரிவதும், கிரீச்சென்றும், மெல்லிய முனங்களுடனும்   விதவிதமான ஒலிகளை எல்லாம் எழுப்பிகொண்டு  சுற்றி வரும் செக்கடியும், அந்த செக்கு மரத்தண்டில் அமர்ந்து காலால் மணல்  தரையில்  கோடிழுத்து செல்வதும், அந்த  வெம்மையிலும் வாணியொழுக செக்கிழுக்கும் மாடுகளுடன்  சுற்றுவதுமாக  கழியும் எனது பள்ளி செல்லா நாட்களின் பகல்  பொழுதுகள்.

கோடைக்கால வெயிலின் உக்கிரம்  தணிந்த ஒரு  சாயந்திரத்தின்வீட்டின்  முற்றத்தில் இருந்த வேப்பமரத்தின்  அடியில் கழியும் எனது இரவுப்   பொழுதுகள். வெயிலின் வெக்கை தெரியாமலிருக்க வாசலில்  தெளிக்கப்படும் தண்ணீரும், அதனால்  கிளம்பும்  மண்வாசனையும், சிறிது ஈரம் காயவிட்டு அதில் ஒரு பாயை போட்டு படுத்திருக்கும் போது  வேப்பமரத்திலிருந்து வீசும் மிதமான இளந்தென்றலும்,  அவ்வப்போது ஆசிர்வதிப்பது போல உதிர்க்கப்படும் வேப்பம்பூக்களும்...   யப்பா அனுபவித்தறியா  பேரானந்தம் இன்னும் என் நினைவுகளில்!!!

 எப்போது நினைத்தாலும் பெருமூச்சிட்டு ஏங்க  வைத்த எனது  பால்யம் சுமந்த நினைவுகள்  இப்போது பசுமையாய்  எனது நினைவுகளில் மட்டும்.!!!

                                                                                                                     பால்யம் மலரும் .....

வாழ்க வளமுடன், தமிழ் தந்த புகழுடன் !!!


8 comments:

  1. பால்ய நினைவுகளைப் பதிர்ந்த விதம் அருமை
    எனக்குள்ளும் பழைய நினைவுகளை கிளறிப்போனது
    மனம் கவர்ந்த பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி..

      Delete
  2. இவை அனைத்துமே இப்பொழுதும் கிடைப்பவைதான், ஆனால் நமது சந்தர்ப்ப சூழ்நிலைகள் அவற்றை எல்லாம் ரசிக்கும் மனநிலையை விட்டு வெகு தூரத்திற்கு நம்மை கொண்டு வந்து விட்டது என்பதுதான் மறுக்க முடியாத நிஜம்.

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் நண்பரே. வருகைக்கு நன்றி.

      Delete
  3. நேர நெருக்கடியில் நிறைய வலைப்பக்கம் வரமுடியவில்லை என்றாலும் சுவாரஸ்யமான பதிவுகளை கிடைக்கும் நேரங்களில் படித்து விடுவேன். பால்ய நினைவுகள் சுவாரஸ்யமான நினைவுகளை வாசிக்கும் எல்லோருக்குமே ஏற்படுத்தும். என் வீட்டில் கூட தோட்டத்தில் பெரிய வேப்ப மரமிருக்கும். பள்ளி நாட்களிலேயே அந்த மரத்துக்கு கீழே உட்கார்ந்து கொண்டு கதை, கவிதைன்னு எழுதுவேன். என் அப்பா அதை படிச்சி பாராட்டி மிக்ஸர் , ஸீவீட் ன்னு திங்க எதாவது வாங்கி தருவார். பறவைகள் சத்தமும், மரங்கள், பூக்களும் என்னிடம் பேசி நிறைய கற்பனையில் பயணிக்க வைக்கும். பால்ய நாட்களிலேயே இருந்து விடக்கூடாதா என்று நினைக்க தோன்றுகிறது.

    ReplyDelete
    Replies
    1. ஒ பள்ளி நாட்களிலேயே எழுத தொடங்கியாச்சா !!பலே பலே... அப்ப மிக்ஸர் , ஸ்வீட்டுக்காகவே நிறைய எழுதலாம் இல்லையா... வருகைக்கும் மறுமொழியிட்டமைக்கும் நன்றி.

      Delete